இந்திய வீரரான பிரித்வி ஷா, இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷைர் கவுன்டி அணிக்காக விளையாட உள்ளார்.
இங்கிலாந்தில் கவுன்டி அணிகளுக்கிடையேயான ஒருநாள் கோப்பை போட்டி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 16-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில், நார்தாம்ப்டன்ஷைர் அணிக்காக பிரித்வி ஷா ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து சென்றார் அவர். முன்னதாக 2 கவுண்டி சாம்பியன்ஷிப் ஆட்டங்களில் பிரித்வி ஷா பங்கேற்க இருந்தார். ஆனால், விசா தாமதமானதால் அவரால் அந்த ஆட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லை.
இந்நிலையில் நார்தாம்ப்டன்ஷைர் கவுன்டி அணிக்காக விளையாடுவது குறித்து பிரித்வி ஷா பேசியதாவது: இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனது திறமையை வெளிப்படுத்த இந்த வாய்ப்பை வழங்கிய நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்தப் போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.
லிஸ்ட் – ஏ பிரிவில் 53 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பிரித்வி ஷா 52.54 சராசரியில் 2627 ரன்களைக் குவித்துள்ளார். பிரித்வி ஷா கடைசியாக இந்தியாவுக்காக 2021-ல் இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் விளையாடினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 அணியில் பிரித்வி ஷா இடம்பெற்றார். இந்த வருட ஐபிஎல் தொடரும் அவருக்குச் சாதகமாக அமையவில்லை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் மற்றும் ஆசிய போட்டிகளுக்கான இந்திய அணியிலும் பிரித்வி ஷா தேர்வாகவில்லை.